×

டெல்லியில் நடைபெற்ற 75ஆவது குடியரசு தின விழாவில் தமிழகத்தை பறைசாற்றும் குடவோலை முறை அலங்கார ஊர்தி அணிவகுப்பு.!

டெல்லி: டெல்லியில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் “பழந்தமிழ்நாட்டின் குடவோலை முறை மக்களாட்சியின் தாய்” என்ற கருப்பொருளின் அடிப்படையில், 10 ஆம் நூற்றாண்டு சோழர் காலக் குடவோலை முறையை மையப்படுத்தி தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தி உருவாக்கப்பட்டு, கடமைப் பாதையில் ஊர்வலம் சென்றது. இந்த அலங்கார ஊர்தியானது. சோழர் காலத்தில் நடைமுறையில் இருந்த (குடத்தில் பனையோலைகள்) தேர்தல் முறையைப் பிரதிபலிக்கிறது. இது மக்களாட்சி முறையின் முன்னோடியாகும். கிராம நிர்வாகத்தை நடத்துவதற்கும். அப்பகுதியின் எண்ணங்களைப் பேரரசுக்குத் தெரிவிக்கப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் இது பயன்பட்டது.

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் கல்வெட்டுகளில் குடவோலை முறைக்கான சான்றுகள் காணப்படுகின்றன. இந்த அமைப்பு ஜனநாயகத்தை நோக்கிய ஒரு தொடக்கநிலை முன்னெடுப்பைக் குறிக்கிறது. டிராக்டர்/முகப்புப்பகுதியில் உள்ள சிற்பம் அனைத்து ஓலைகளும் குடத்தில் போடப்பட்டபிறகு பிரதிநிதிகள் தேர்வுமுறையைச் சித்தரிக்கிறது. டிரெய்லர்/முதன்மைப் பகுதியானது தேர்தல் நடைமுறைகள் மற்றும் கிராம மேம்பாட்டுத் திட்டம் தயாரித்தலை விவரிக்கிறது.

முக்கியத் தகவல்களை மக்களுக்கு அறிவிக்கப் பயன்படும் பறை, ஊரின் குறிப்பிட்ட பகுதியிலுள்ள அனைத்து மக்களும் தங்கள் வாக்குச் சீட்டுகளை குடத்தில் இடுவதற்கு வரிசையில் நிற்றல், ஒரு சிறுவன் குடத்திலிருந்து ஓலையை எடுத்தவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயரினை உரக்க அறிவித்தல், தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு ஊர்ப் பெரியவர்கள் மாலை அணிவித்து வாழ்த்துதல் & வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஆடுதல், கிராம மக்கள் ஓர் ஆலமரத்தடியில் ஒன்று கூடி கிராம மேம்பாட்டுத் திட்டங்களைத் தீட்டுதல் ஆகிய காட்சிகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

குடவோலை முறையை விவரிக்கும் கல்வெட்டு அமைந்துள்ள உத்திரமேரூர் வைகுண்டபெருமாள் கோயிலின் உருவ மாதிரியும் இந்த அலங்கார ஊர்தியில் இடம் பெற்றுள்ளது. மேலும், குடவோலை குறித்துக் குறிப்பிடும் மருதன் இளநாகனார் எழுதிய ‘கயிறுபிணிக் குழிசி ஓலை’ என்ற சங்க இலக்கிய அகநானூற்றுப் பாடல் வரிகளுக்கு இசைக்கோர்ப்பு செய்யப்பட்டு மகளிர் ஆடிய நடனம் பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது.

The post டெல்லியில் நடைபெற்ற 75ஆவது குடியரசு தின விழாவில் தமிழகத்தை பறைசாற்றும் குடவோலை முறை அலங்கார ஊர்தி அணிவகுப்பு.! appeared first on Dinakaran.

Tags : GUDAVOLAI ,75TH REPUBLIC DAY FESTIVAL ,DELHI ,Mother of Democracy ,Republic Day Celebration ,Government of Tamil Nadu ,Chozhar Kalag Gudawola ,Tamil Nadu ,75th Republic Day Celebration ,
× RELATED இடைக்கால ஜாமின் பெற்ற கெஜ்ரிவால்...